சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலும், முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் 25 கிராம நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisment

green roads chennai high court

இந்த வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. இந்தப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யாமல் புதிதாக இந்தத் திட்டம் கொண்டு வருவதால், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

green roads chennai high court

இந்த வழக்கில் நேற்று (09.01.2020) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் முறையான அனுமதி பெறும்வரை, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தக் கூடாது என நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான எந்த அரசாணையையும் ரத்து செய்யவில்லை என தெரிவித்த நீதிபதிகள், முறையான அனுமதி பெறும் பட்சத்தில் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தெளிவுபடுத்தினர்.

Advertisment

இந்த நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 10 மரம் என்கிற விகிதத்தில் நடப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட, குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.