திண்டிவனத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் குழாய்கள் அமைக்கப்படுவதாகத் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், நடப்பட்ட அனைத்துக் குழாய்களும் சினிமா செட் பாணியில் டம்மி பைப்புகளாக இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ளது ஒழுந்தியாப்பட்டு ஊராட்சி. இங்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் சுமார் 40 வீடுகளுக்குக் குடிநீர் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. ஜல் ஜீவன் திட்டத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 752 மீட்டர் நீளத்துக்கு பைப்லைன் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் இறுதியில் மேல்நிலைத் தொட்டியுடன் குடிநீர் குழாய்களை இணைத்து வீடுகளுக்கு நீர் வழங்காமல் வெறும் சிமெண்ட் கல்லை நட்டு அதில் 'எல்' வடிவில் வெறும் குழாயை மண்ணில் நட்டு வைத்திருந்ததைக் கிராம மக்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை அம்பலப்படுத்தும் விதமாக வீடியோக்களும் எடுத்து வெளியிட்டனர். டம்மி குழாய்களை நட்டு வைத்துவிட்டு வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி விட்டதாகவும் இதற்கு 3.76 லட்சம் செலவாகியுள்ளதாகவும் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் சுலோச்சனா மற்றும் அவரது மகன் சக்திவேல் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்பதே ஒழுந்தியாப்பட்டு ஊராட்சி மக்களின் கோரிக்கை.