அக்டோபர்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது காணொளி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு பற்றி இந்த கிராம சபை கூட்டங்களில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையில், ''மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தான் முறையாக தடங்கள் இன்றி கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். கிராமப்புற மக்களின் குரல் எப்போதும் எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயக தேர்தல் அமைப்புமுறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு தான் கூறுகிறது.
யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்களோ அவர்களின் எல்லோருடைய பெயர்களையும் ஓலைச்சுவடியில் எழுதி குடத்தில் போடுவார்கள். அந்த குடத்தை குலுக்கி ஒரு ஓலையே எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட ஓலையில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில் தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றி இருக்கிறது. அதிலும் குறிப்பாக கிராம சபை என்ற அமைப்பு தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் சோழர்காலம் தொட்டே புழக்கத்தில் இருந்து வருகிறது.
சோழப் பேரரசில் ஊர் மற்றும் மகாசபை என்ற இரு வேறு அவைகள் இருந்தது. இதில் மகாசபையை போன்றது தான் தற்போதைய கிராம சபை என்று அறிய முடிகிறது. மக்களாட்சியுடைய ஆணிவேராக இருக்கக்கூடிய கிராம சபை கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து தங்களுடைய தேவைகளையும் பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பது போல கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கும் மன்றமாக அமைந்திருக்கிறது.
கிராம சபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 குறிப்பிட்டிருந்தாலும் அதை ஆண்டுக்கு நான்கு முறை என்று கலைஞர் மாற்றினார். தற்போதைய திராவிட மாடல் அரசனது இதை ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அதிகரித்திருக்கிறோம். அதன்படி ஆண்டொன்றுக்கு முறையே குடியரசு நாள், உலக தண்ணீர் நாள், தொழிலாளர் நாள், விடுதலை நாள், காந்தியடிகள் பிறந்தநாள், உள்ளாட்சி நாள் ஆகிய ஆறு நாட்களில் கிராம சபை நடைபெற்று வருகிறது'' என தெரிவித்துள்ளார்.