திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் கரிக்கலாம்பாடி கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் 35 அடி அகலம் கொண்ட ஏரிக்கரையை ஜேசிபி இயந்திரம் கொண்டு சுரண்டி சாலை அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிராம பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்தனர். மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே கரிக்கலாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் மார்ச் மாதத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, கரிக்கலாம்பாடி கிராம மக்கள் நீதி கேட்டு தொடர் முழுக்க போராட்டத்தினை அறிவித்து இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கரிக்கலாம்பாடி சேர்ந்த ஊர் பொதுமக்கள் சுமார் 100 பேர் ஒன்று திரண்டு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல இருந்தனர். இதனை அடுத்து, திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேரணியை கைவிட செய்தனர். அதனை தொடர்ந்து, துணை ஆட்சியர் (பயிற்சி) கலைவாணி தலைமையில் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, பொதுப்பணித்துறை அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் பொழுது கரிக்கலாம்பாடி பொதுமக்கள், 15 நாட்களுக்குள்ளாக ஏரிக்கரையை சுரண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பழைய படி ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்க விட்டால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.