Skip to main content

“கிராமத்தைச் சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

"Village should be developed in the best way" - Minister K.N. Nehru

 

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, சிறப்பு சுகாதார முகாமான ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்து இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு தூய்மைப் பணிக்கான உபகரணங்களையும், மரக் கன்றுகளையும்,  வழங்கி உரையாற்றினார்.

 

அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது; “திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளிலும் சிறப்பு சுகாதார முகாமான ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளுதல், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை திட, திரவக் கழிவு மேலாண்மை தொடர்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்துதல், செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 16 வரை அனைத்து வீடுகளிலும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் மக்களுக்கு நல்ல சத்தான உணவுகள் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பப்பாளி முருங்கை போன்ற மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் கிராமங்கள் பசுமையாகத் திகழ்ந்திடும் வகையில்; மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

 

நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி என்கிற அளவிலும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.26 ஆயிரம் கோடி என்கிற அளவிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.40 ஆயிரம் கோடி அளவிற்கு குடிநீர் திட்டங்கள் மூலம் கிராமங்கள் வரை குடிநீரை கொண்டு சென்று அந்த மேல்நிலைத் தொட்டியில் வழங்கும் பணியை குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்ளும். அங்கிருந்து இல்லங்கள் தோறும் அந்த குடிநீர் இணைப்புகளை ஜல்ஜீவன் மிஷன் உள்ளிட்ட திட்டங்களால் கொண்டு சேர்க்கப்பட்டு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

 

கிராமங்களைத் தூய்மையாக வைப்பதன் மூலம் தமிழ்நாடு இந்தியா அளவில் ஒரு சிறந்த மாநிலமாக உருவாகும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பாடுபட வேண்டும். இந்த பணியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டவரை பயன்படுத்தி கிராமத்தை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும்.” இவ்வாறு பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, ந.தியாகராஜன், ப.அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, ஒன்றியக் குழுத் தலைவர் ச.துரைராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்