நாளை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, இந்தியா முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூடும் நாள். இந்த கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால் தான் கடந்த காலங்களில் புதுக்கோட்டை நெடுவாசல் உள்பட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், இளைஞர்கள் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர். பல ஊராட்சிகளில் அரசு தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானம் எழுதப்படாமல் மனுவாக மட்டுமே பெற்றுச் சென்றனர். பல கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, ஜனவரியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மே தினத்தில் கிராம சபைக்கூட்டம் நடக்கவில்லை.
இந்நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வழக்கமாக நடக்கும் கிராம சபைக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. கிராம சபைக் கூட்டம் நடக்க உள்ளதால் ஒவ்வொரு கிராமத்திலும் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதேபோல விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களும் விவசாயிகள், இளைஞர்களும் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. மற்றொரு பக்கம் ஒவ்வொரு கிராமத்தில் கிராம சபை நடத்த துண்டறிக்கைகள் அச்சடித்து விளம்பரங்கள் செய்துள்ள நிலையில் கரோனா பரவலைக் காரணம் காட்டி மதுரை, திருச்சி, திருவாரூர், நெல்லை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், நாமக்கல், ராமநாதபுரம், தர்மபுரி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஊராட்சிகளுக்கு வீண் செலவுகள் ஏற்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் நடந்தால் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவார்கள் என்பதால் கரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்துச் செய்துள்ளனர். மேலும், வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து பரவி வருவதாலும், சிறுமி வன்கொடுமைக்கு நீதி கேட்பு போராட்டம், காங்கிரஸ் ராகுல்காந்தி மீது தாக்குதல் சம்பவங்களுக்காக காங்கிரஸ் போராட்டம் என நாடே போராட்டக்களமாகி வருவதால் போராட்டங்களை முடக்க கரோனாவை காரணம் காட்டி மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்த போராட்டம் வலுவடையும் போதும் போராட்டங்களை முடக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கரோனா கைகொடுத்தது போல தற்போதைய போராட்டங்களுக்கும் கரோனா கைகொடுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.