Skip to main content

கிராம சபைக் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை

Published on 30/09/2023 | Edited on 01/10/2023

 

Village council meeting C M M.K.Stal's speech

 

தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி (02.10.2023) அன்று 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபைக் கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராம சபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

 

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்கவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணப்படி அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாகக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக எல்லார்க்கும் எல்லாம் என்கிற மையக் கருத்தின்படி நடத்தப்படவுள்ளது.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

இவ்வழைப்பிதழ் கிராம சபைக் கூட்டத்திற்கான கருப்பொருளான எல்லார்க்கும் எல்லாம் எனும் மையக் கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

 

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாகத் திட்டச் செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

 

கிராமசபைக் கூட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் 02.10.2023 அன்று துவக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்திட உள்ளார். மேலும், அமைச்சர்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கிராமசபைக் கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாகக் கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

இதில், பொதுவான விவாதப் பொருட்களாக, ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்