Skip to main content

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.