கஜா புயலால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவிட்டு வேடசந்தூர் தொகுதியில் உள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார். அப்பொழுது கூட்ட நெரிசலில் நிவாரணப் பொருட்கள் வாங்குவதில் தோப்புப்பட்டியைச் சேர்ந்த மகமாயி என்ற பெண் மயங்கி விழுந்தார். உடனே அருகிலிருந்த கட்சிக்காரர்கள் அந்தப் பெண்ணுக்கு மயக்கம் தெளிய வச்சு நிவாரணப் பொருள் கொடுத்து அனுப்பினார்கள்.
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தேமுதிக சந்திக்க தயாராக இருக்கிறது. தமிழகத்தில் புதுப்புது கட்சிகள் வரட்டும். எங்களுக்கு உள்ள வாக்குவங்கி பலமாக உள்ளது. ஆனால் வரப்போகிற தேர்தல் தமிழகம் பார்க்காத தேர்தலாக புது தேர்தலாக இருக்கும். ஏனென்றால் இரண்டு ஆளுமைமிக்க தலைவர்கள் இங்கு கிடையாது. வெற்றிடம் இருக்கு என்று சொல்கிறார்கள். தலைவர்களுக்கு தான் வெற்றிடம் உள்ளது. கட்சிக்கு கிடையாது. நிச்சயமாக எத்தனை புதுவரவுகள் வந்தாலும் அந்தந்த கட்சிகளுக்கு வாக்கு வங்கிகள் உள்ளது. மக்கள் இந்த முறை மாற்றத்திற்கான ஒரு மாற்றத்தை கொண்டு வருவது உறுதி. இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திமுகவும் அதிமுகவும் இருக்கட்டும் இரண்டு கட்சிகள் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பார்க்கமுடியாமல் ஊருக்குள் போகமுடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.
மக்களுக்கு செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் ஆளுங்கட்சி தவறியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்க திராணி இல்லாததால் ஹெலிகாப்டரில் சுற்றிவிட்டு சந்திக்க முடியவில்லை என்று போய் விட்டார். அந்த மாதிரி நிலைமை இருக்கிறது. வரப்போகிற தேர்தல் மாற்றத்தை நிச்சயம் தரும். கடந்த 10 நாட்களாக மின்சாரம் இல்லாமல் சாலை வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
மக்களுடைய பிரச்சினையை கையிலெடுத்து தீர்க்கக்கூடிய அரசு தான் இனிமேல் வரவேண்டும். தேமுதிக வாக்குவங்கி கூடிக்கொண்டே வருகிறது. வரப்போகும் தேர்தலில் விசுவரூபம் எடுத்து வெற்றி பெறுவோம். மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய காங்கிரஸ் பாஜக கட்சி கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி ராகுல் காந்தியை தவிர வேற வேட்பாளரை அறிவிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறார். காங்கிரஸ் இன்னும் தரம்தாழ்ந்து மோடியின் அப்பா யாரென்று தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதுதான் மக்கள் பிரச்சனையா. மக்களுக்கு செய்ய வேண்டிய பிரச்சனை இன்னும் எவ்வளவோ இருக்கிறது. வல்லரசாக்க திட்டங்களை கொண்டு வருவதற்கு.
ஐந்து வருடம் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக மோடி இருந்துவிட்டார். வேற ஒரு பிரதமர் வேட்பாளரை பாஜகவால் அறிவிக்க முடியுமா? முடியாது சும்மா சப்பைக்கட்டு கட்டி அடுத்த கட்சி மீது பழியை போட்டு இவர்கள் உத்தமர்கள் என்று காண்பிபதற்காக இருங்காங்க பாஜக. மோடியோட அப்பா யார் என்று கேட்கிறார்கள் இதெல்லாம் தரம் தாழ்ந்த அரசியல் இதெல்லாம் மாற வேண்டும். நாடும் மக்களும் முன்னேறும் வகையில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. மக்கள் பிரச்சினையை பேசாமல் காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது குற்றம் சொல்ல பாரதிய ஜனதா காங்கிரஸ் மீது குற்றம் சொல்லுகிற அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக நல்லது நடக்க கூடிய அரசாங்கம் இங்கு இல்லை. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி. ஆயிரம் கோடி அறிவித்தும் முதல்வர் 10 நாட்கள் ஆகியும் இன்னும் கொடுக்கவில்லை. மத்திய அரசிடம் நிதி வரும் அதை வாங்கி கொடுத்துவிட்டு ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறாரா.
மக்கள் கேள்வி நான் கேட்கிறேன். முதல்வர் ஆயிரம்கோடி அறிவிப்பை அறிவித்துவிட்டு எதற்காக எடப்பாடி பழனிச்சாமி இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதியை வாங்கி இவர் கொடுத்த போல் கொடுத்துவிட்டு மீதி தொகையை இவர்கள் சுருட்டி விடலாம் என நினைக்கிறார்களா. இது மக்கள் கேள்வி ஆகையால் இனிமேல் அறிவிப்பு அரசியல் இங்கு எடுபடாது மக்களுக்கான பணிகள் என்ன என்று ஆராய்ந்து செய்யக்கூடிய நல்ல அரசு, தைரியமான நல்ல முதல்வர் நல்லாட்சி வேண்டும் என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது என தெரிவித்தார்.