கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாகவும், கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போதும், நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா வீட்டிற்கும் நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.