![Vijay visit to all districts in Tamil Nadu says Bussy Anand](http://image.nakkheeran.in/cdn/farfuture/zvQIrhu94MqjsvaxwBeu88rbw1DBtvYS6YB4rnlda64/1718449966/sites/default/files/inline-images/08_35.jpg)
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெண்ணெய் மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த புஸ்ஸி ஆனந்திற்கு கரூர் கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறினார்.
அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், “பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நம் தொண்டனை அழைத்து ஒரு லட்சம் பணம் வேண்டுமா, தளபதியின் புகைப்படம் வேண்டுமா எனக் கேட்டால், பணத்தை விட்டு விட்டு தளபதியின் புகைப்படத்தை எடுத்து செல்லும் தொண்டர்கள்தான் இருக்கிறார்கள். விரைவில் கரூர் மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய் வருகை தர இருப்பதாகவும், உங்களைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் 2026இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் இருக்கையில் விஜய்யை அமர வைக்க வேண்டும் என்பதே நோக்கம், அதற்காக அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும். இன்னும் 18 மாதங்கள் தான் இருக்கிறது" என்றார்.