ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி அலையும் காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள், காலையிலும் மாலையிலும் ஒருவித அச்சத்துடனே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர்.
அதே நேரம், வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், அங்கு உலாவும் காட்டு யானைகள் சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்புகளைப் பறித்து உண்பது வாடிக்கையாக உள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த பேருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக காரப்பள்ளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிரே காட்டு யானை ஒன்று வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர். ஆனால், அந்த காட்டுயானை சாலையின் நடுவே நின்றுகொண்டு பேருந்தை வழிமறித்தது. அதனைத் தொடர்ந்து, அந்த காட்டுயானை பேருந்தின் மேல் பகுதிக்கு வந்து தனது தும்பிக்கையால் கரும்புகள் ஏதாவது இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தது. ஆனால், அந்த பேருந்தில் கரும்புகள் எதுவும் இல்லாததால் காட்டுயானை சிறிது நேரத்தில் சாலை ஓரமாகச் சென்று பேருந்துக்கு வழிவிட்டது.
அதன்பிறகு, அந்த பேருந்து அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றது. அதே நேரம், கோபமாகப் பேருந்தை வழிமறித்த காட்டுயானை, பின்னர் அமைதியாகச் சென்றதால் உள்ளே இருந்த பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது, காட்டுக்குள் சென்ற பேருந்தை வழிமறித்து கரும்பு தேடிய யானையின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.