Skip to main content

“நாங்க இந்து சேனா... எங்களுக்கே பணமில்லையா” - மிரட்டும் கும்பல்

 

video of a gang threatening the college administration is going viral

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ளது வடசேரி ஊராட்சி. இந்த பகுதியில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராயத்தால் நிர்வகிக்கப்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கல்லூரிக்கு மாருதி 800 காரில் மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் நேராக கல்லூரி அலுவலகத்திற்குள் புகுந்து, விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக நன்கொடை என்ற பெயரில் டொனேஷனாக பணம் கேட்டுள்ளனர்.

 

அப்போது, இதைக் கேட்ட கல்லூரி நிர்வாகத்தினர், “முதல்ல நீங்க யாரு. நாங்க எதுக்கு உங்களுக்கு பணம் கொடுக்கணும்” எனக் கேள்வி எழுப்பினர். அதே நேரம், இதே பெயரில் நன்கொடை கேட்டு பலர் வருவதால் நன்கொடை வழங்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இதனிடையே, கல்லூரிக்குள் வந்தவர்கள், “நாங்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவங்க. மேற்கு மாவட்டத்துல இருந்து வரோம். நரேந்திர மோடி கட்சிக்காரங்க. எங்களுக்கே பணம் இல்லையா? என மிரட்டல் தொனியில் பேசினர்.

 

இதையடுத்து பேசிய கல்லூரி நிர்வாகத்தினர், “நீங்க மேற்கு மாவட்டம்னா அங்க போயிட்டு கேளுங்க. இங்க ஏன் வரீங்க. இது கிழக்கு மாவட்டம். எதுக்கு இந்த மாதிரிலாம் பண்றீங்க” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். ஒருகட்டத்தில், பதற்றமடைந்த இந்து சேனா அமைப்பினர், “எங்களை நீங்க வாங்கன்னு கூப்பிடாதீங்க. ஜீ... னு கூப்பிடுங்க. நீங்க எதுக்கு கணபதி பத்தி பேசுறீங்க. நாங்க விநாயகர் சதுர்த்திக்கு, அன்னதானத்துக்கு பைசா வாங்குவோம். இதெல்லாம் தப்பா சார்” என்று அப்படியே பிளேட்டை மாற்றினார்.

 

அதுமட்டுமின்றி, கல்லூரி நிர்வாகத்தினர் மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுக்கவும் முயற்சித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதங்கள் எழுந்தது. இதையடுத்து, இந்து சேனா அமைப்பினர் எவ்வளவோ கேட்டு பார்த்தும் கல்லூரி நிர்வாகத்தினர் நன்கொடை வழங்க மறுத்ததால், அந்த மூன்று பேர் அங்கிருந்து நழுவ பார்த்தனர். ஆனால், அவர்களை பின்தொடர்ந்த கல்லூரி நிர்வாகத்தினர், நீங்கள் யார் என்று கேட்டதற்கு, “நாங்க இந்து சேனா.. இந்து சேனா.. நரேந்திர மோடி.. நரேந்திர மோடி” என கத்திப் பேசியவாறு மூவரும் காரில் ஏறி அங்கிருந்து வெளியேறினர்.

 

இந்நிலையில், நன்கொடை கேட்டு மிரட்டுவதாக, இந்து சேனா அமைப்பினர் மீது கல்லூரி நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இந்து சேனா நிர்வாகி பிரதீப்குமார், பிரதீஷ், மூர்த்தி ஆகிய 3 மூன்று பேரையும் வலைவீசி தேடி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர்களைக் கைது செய்தனர்.  இதையடுத்து, அந்த மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

இதற்கிடையில், பிரதீஷை நாகர்கோவில் சப் ஜெயிலில் அடைப்பதற்காக போலீசார் கொண்டு சென்றார்கள். அப்போது, அவர் சிறைச்சாலை முன்பு அமர்ந்துகொண்டு, “அய்யோ அம்மா, என்னை விட்டுடுங்க..” என்று குழந்தை போல் கதறி கதறி அழுது கூச்சலிட்டார். அதன்பிறகு, அவரை போலீசார் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். தற்போது, கிறிஸ்தவ கல்லூரிக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டிய இந்து சேனா அமைப்பினரின் வீடியோ பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !