தமிழ்நாட்டிலுள்ள வக்பு வாரிய சொத்துக்கள் என அறியப்பட்டவைகள் மீது பரிவர்த்தனை செய்யக் கூடாது என தமிழ்நாடு வக்பு வாரியம் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகத்திலும், கடந்த ஜனவரி மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வே நம்பரில் உள்ள சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட, சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்கு, சொந்தமான சொத்துக்கள் என்றும், யாரும் உரிமை கோர முடியாது எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அந்த சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டிட்மென்ட் செய்யவோ இயலாமல் பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வக்பு வாரிய பரிந்துரையைப் புறக்கணித்து, சொத்து பரிவர்த்தனையை நடத்தக் கோரி விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் பாதிக்கப்பட்டவர்கள் 200- க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிக்க கோரியும், சட்டப்படி கிரையம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வருவாய்த்துறை ஆவணங்களில் வக்போர்டு சொத்து என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால் உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிப்பு செய்ய தமிழக அரசு தலையிட்டும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், சட்டப்படி கிரையம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று கோரிக்கைகளை மனுவாக, விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பழனியிடம் மனுவாக அளித்தனர். 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.