தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (12.02.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 2 வது நாளான நேற்று (13.02.2024) மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக 4 முறை சபாநாயகரை சந்தித்தும், பல முறை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்தும் கடிதங்களை வழங்கி இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகே அமைக்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க.விற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி. உதயகுமாருக்கு சபையில் இடம் ஒதுக்கி தருவது குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு சபாநாயகர் அப்பாவும், இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகருக்கு உரிய உரிமை என்று கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பல முறை கோரிக்கை விடுத்து வருகிறார். ஏற்கெனவே சட்டப்பேரவையில் தலைவராக இருந்த தனபால் இருக்கை விவகாரத்தில் என்ன தீர்ப்பு அளித்தாரோ அதனைச் சுட்டிக்காட்டி சபாநாயகர் அப்பாவு பதில் சொல்லி வருகிறார். இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ள, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சபாநாயகரை உரிமையுடன் கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, “எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வரின் கோரிக்கையையடுத்து இது குறித்து சபநாயகர் அப்பாவு மறு பரிசீலனை செய்தார். அதன்படி எடப்பாடி பழனிசாமி அருகே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி அருகே அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டு 2 வது வரிசையில் முன்னாள் சபநாயகர் தனபால் இருக்கைக்கு அருகே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.