துணைவேந்தர் நியமனத்திற்கான நடைமுறை வெளிப்படையானதாக மாற்றப்பட வேண்டும்! என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக முனைவர் பி.பி.செல்லத்துரை நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடிப்படைத் தகுதியற்ற, ஏராளமான புகார்களுக்கு உள்ளான ஒருவர் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலம் காமராசர் பல்கலைக்கழகம் காப்பாற்றப்பட்டிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியளித்தாலும், துணைவேந்தர் நியமனங்கள் அடிக்கடி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் அளவுக்கு சீரழிந்திருப்பது வேதனையளிக்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் செல்லத்துரை கடந்த ஆண்டு மே 27&ஆம் தேதி நியமிக்கப்பட்ட போதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதாகும். ஆனால், செல்லத்துரைக்கு அத்தகுதி இல்லை. அது தவிர பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகளும் இவர் மீது சுமத்தப்பட்டன. இதற்கெல்லாம் மேலாக காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் பணியாற்றிய போது, கிட்டத்தட்ட அவரது அடியாளாக செயல்பட்டு அவருக்கு எதிரானவர்களை மிரட்டும் பணியைத் தான் செல்லத்துரை தலைமையிலான குழு செய்து வந்தது. கல்யாணியின் ஊழல்களை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசனை கூலிப்படையை ஏவி, கொலை செய்ய முயன்ற வழக்கில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.
இப்படிப்பட்ட கல்வித்துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியவர்களை துணைவேந்தராக நியமனம் செய்யக்கூடாது என்பதற்காகத் தான் பா.ம.க. போராடி வந்தது. இப்போது உயர்நீதிமன்றம் மூலமாக நீதி கிடைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை சில மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டிருந்தாலோ, துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்படாமல் இருந்திருந்தாலோ மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மாண்பு காப்பாற்றப்பட்டிருக்கும். உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மூலம் மாணவிகளை பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்களின் தேவைக்காக சீரழித்தக் கொடூரம் தடுக்கப்பட்டிருக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. உமா கேட்டரிங் என்ற நிறுவனத்திலிருந்து கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7 கோடிக்கு உணவு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டி, அதில் பெருமளவு தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் கடந்த மாதம் 30&ஆம் தேதி துணைவேந்தராக பதவியேற்றதன் ஓராண்டு விழாவை, ஆட்சியாளர்களுக்கு இணையாக விளம்பரம் செய்து கொண்டாடி கல்வியாளர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/photo 25 _0.jpg)
காமராசர் பல்கலைக்கழகத்தில் இவருக்கு முன் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனும் இதே காரணங்களுக்காக உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டவர் தான். நேர்மையின் சின்னமான காமராசர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அந்த பல்கலைக்கழகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உயர்கல்வித்துறைக்கும் ஏற்பட்ட இழுக்கு ஆகும். துணைவேந்தர் பதவிகள் கோடிகளில் ஏலம் விடப் படுவதும், இதற்காக அமைக்கப்படும் தேர்வுக்குழுக்களில் இடம் பெறுவோர் கல்வியை விட ஊழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தான் இத்தகைய அவலங்களுக்கு காரணம் ஆகும். செல்லத்துரை நியமனத்திலும் அது தான் நடந்துள்ளது. தேர்வுக்குழுத் தலைவராக இருந்த முருகதாஸ் கட்டாயப்படுத்தியதன் பேரில் தான் செல்லத்துரை பெயரை பரிந்துரைத்ததாக குழுவின் மற்ற உறுப்பினர்களான இராமகிருஷ்ணன், ஹரீஷ் மேத்தா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இனியும் இத்தகைய அவப்பெயர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு துணைவேந்தர் தேர்வுக்கான நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். முதலில் தேர்வுக்குழுவில் இடம் பெறுபவர்கள் துணைவேந்தரை விட கூடுதல் தகுதியும், அப்பழுக்கற்ற பின்னணியும் கொண்டவர்களாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் உள்ளிட்ட தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். கடைசியாக ஆளுனருக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக்குழு வெளியிட வேண்டும். அப்போது தான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழலையும், தலைகுனிவையும் தடுக்க முடியும்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்த்து, உயர்நீதிமன்ற ஆணைப்படி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, நேர்மையான கல்வியாளர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த ஓராண்டில் செல்லத்துரை மேற்கொண்ட நியமனங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், நியமனங்களில் நடந்த ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)