Skip to main content

தாமதமாக வரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள்; கொந்தளித்த துணைவேந்தர்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vice-Chancellor  action due to Salem Periyar University teachers being late

பெரியார் பல்கலையில் பேராசிரியர்கள் அன்றாடம் பணிக்கு தாமதமாக வருவதால், கொதிப்படைந்த துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் பொறுப்பற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறைத்தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலையில் 27 துறைகள் இயங்கி வருகின்றன. 140க்கும் மேற்பட்ட உதவி, இணை மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள் அனைவரும் வேலை நாட்களில் காலை 9.30 மணிக்குள் பணியில் இருக்க வேண்டும். ஆனாலும் ஊழியர்கள் தாமதகமாக பணிக்கு வருவது தொடர்ந்தது. இதையடுத்து, தாமத வருகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த செப். 1ம் தேதி முதல் முகம் பதிவு செய்யும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய உபகரணம் வைக்கப்பட்ட பிறகும்கூட, பணிக்கு தாமதமாக வந்தே பழக்கப்பட்ட ஆசிரியர்கள் வழக்கம்போல் ஆளாளுக்கு ஒரு நேரத்திற்கு வந்தனர். செப். 1 மற்றும் 2ம் தேதிகளில் மட்டும் 75 ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தாமதமாக பணிக்கு வந்திருப்பது தெரிய வந்தது. இதையறிந்த பல்கலை நிர்வாகம், இனிமேலும் தாமத வருகை இருக்கக்கூடாது என அவர்களை எச்சரித்ததுடன் நின்று கொண்டது. இந்நிலையில், டிச. 7ம் தேதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 உதவி, இணை மற்றும் பேராசிரியர்கள் பணிக்கு தாமதமாக வந்திருப்பது கண்டு  பல்கலை நிர்வாகம் கொதிப்படைந்தது.

இதையடுத்து, பணிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் மீது அந்தந்த துறைத்தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலையின் 'நிரந்தர' பொறுப்பு பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய துறைத்தலைவர்கள் சிலரும் பணிக்குத் தாமதமாக வந்திருக்கின்றனர். துறைத்தலைவர்கள் செல்வராஜ்(கணிதம்) காலை 9.59 மணிக்கும், போலி சான்றிதழ் புகாரில் சிக்கிய பெரியசாமி (தமிழ்) 9.58 மணிக்கும், நந்தகுமார் (இதழியல்) 9.36க்கும் வருகையைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர, பேராசிரியர்கள் சந்திரசேகர் (கணினி அறிவியல்), ஜனகம் (பொருளியல்), வசந்தா (சுற்றுச்சூழல் அறிவியல்), வெங்கடாசலபதி (புவியமைப்பியல்), ஜனபிரியா (டெக்ஸ்டைல்), திவாகர் (டெக்ஸ்டைல்), சத்தியப்பிரியா (விலங்கியல்) ஆகியோர் மிக அலட்சியமாக காலை 9.50 மணிக்கு மேல் பணிக்கு வந்துள்ளனர். இவர்களில் பேராசிரியர் வெங்கடாசலபதி 'மிக மோசம்' என்று சொல்லும் வகையில் காலை 10.01 மணிக்கு வருகையைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக நேரந்தவறாமையைக் கடைபிடிக்கும் ஆசிரியர்கள் தரப்பில் கேட்டோம், “முன்மாதிரியாக இருக்க வேண்டிய பல்கலை ஆசிரியர்கள் பலர் பாலியல் புகாரில் சிக்கித்தவிப்பது, முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் காலத்தில் பணம் கொடுத்து பணியில் சேர்ந்த திறமையற்ற ஆசிரியர்கள், சாதி ஆதிக்கம், அரசியல் சார்பு என பெரியார் பல்கலைக்கழகம் எல்லா வகையிலும் ஒழுக்கம் தவறி கெட்டுக் குட்டிச்சுவர் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு பேராசிரியரும் மாதம் பிறந்தால் 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் சுளையாக சம்பளம் பெறுகின்றனர். 8 மணி நேரத்திற்கும் குறைவான பணி, வார விடுமுறை, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, கோடை விடுமுறை என எத்தனையோ சலுகை மழையில் நனைகிறோம்  என்பதுதான் உண்மை. இத்தனை சலுகைகள் இருந்தும், மாணவர்களுக்கு எல்லா விதத்திலும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பணிக்கு தினமும் தாமதாக வருவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து அறிவுரை கூறினால் அவர்களை ஒதுக்கி விடுகிறார்கள். நேரந்தவறாமை என்பது ஆகச்சிறந்த ஒழுக்கம். தாமதமான வருகை என்பது ஒரு குற்றச்செயல் என்ற உணர்வே இங்குள்ள பலரிடம் கிடையாது. தாமதமாக பணிக்கு வருவோரை மைக் மூலம் பகிரங்கமாக அறிவித்து அசிங்கப்படுத்த வேண்டும்,'' என குமுறுகின்றனர் ஒழுக்கமான  ஆசிரியர்கள்.

இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, “நான் இங்கு துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வந்துவிடுகிறேன். பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருப்பேன். எல்லோருக்கும் நான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக்கருதி இவ்வாறு செயல்படுகிறேன். ஆனால் ஆசிரியர்களுக்கு அத்தகைய சிந்தனை இருப்பது இல்லை. தாமதமாக பணிக்கு வராதீர்கள் என்று சொன்னாலும் பொருட்படுத்துவதில்லை. காலை 9.30 மணிக்குள் பணியில் இருக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக 10 நிமிடம் சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்பதை உரிமையாகக் கோர முடியாது. தொடர்ச்சியாக தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளி வியாபாரி கொலை வழக்கு; கூலிப்படை கும்பல் தலைவன் நீதிமன்றத்தில் சரண்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Silver merchant case; gang leader surrendered in court

சேலத்தில், வெள்ளி வியாபாரி கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படை கும்பல் தலைவன் கோழி பாஸ்கர், நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் (49). வெள்ளி வியாபாரி. இவர், பிப். 2ம் தேதி அதிகாலையில் பால் வாங்குவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், சங்கர் விபத்தில் சாகவில்லை என்பதும், அவரை திட்டமிட்டு கார் ஏற்றிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. 

சங்கரின் மைத்துனர் சுரேஷ்பாபு என்பவர்தான் கூலிப்படையை வைத்து கார் ஏற்றிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. சுரேஷ்பாபு, அவருடைய கூட்டாளிகள் 3 பேர், கூலிப்படை கும்பல் தலைவன் கோழி பாஸ்கரின் இரட்டை சகோதரிகள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கோழி பாஸ்கர், அவருடைய தம்பி ராஜா ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின்பேரில் தனிப்படை காவல்துறையினர் அங்கும் விரைந்தனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. 

இந்நிலையில், கோழி பாஸ்கர் சேலம் 4வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் பிப். 22ஆம் தேதி, நீதிபதி யுவராஜ் முன்னிலையில் சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதேநேரம், தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கோழி பாஸ்கரின் தம்பி ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சேலம் சிறையில் ஏற்கனவே சில வழக்குகளில் கோழி பாஸ்கர் அடைக்கப்பட்டு இருந்தபோது, கைதிகள் சிலருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவர்களும் தற்போது வெளியே இருக்கின்றனர். அந்த சிறை நண்பர்கள் மூலமாக கோழி பாஸ்கருக்கு புதிய சிம் கார்டுகள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் ஓசூர், பெங்களூரு பகுதியில் பதுங்கிக் கொள்ளவும் உதவி செய்துள்ளனர். கோழி பாஸ்கரின் செலவுக்காக கூகுள்பே செயலி மூலமாக அவ்வப்போது பணமும் அனுப்பி வைத்துள்ளனர். அதனால்தான் கோழி பாஸ்கரை எளிதில் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். 

Next Story

சிறுவனை வன்கொடுமை செய்த வழக்கு; திருநங்கைகள் 2 பேருக்கு ஆயுள்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Life sentence for 2 transgenders

சேலம் அருகே, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழகத்தில் முதன்முதலாக திருநங்கைகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், காக்காபாளையத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தான். கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை மாதம் வார விடுமுறை நாளில், உள்ளூரைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் வீட்டிற்கு சோர்வுடன் தளர்ந்த நடையில் சென்று சேர்ந்தான். 

இதைப்பார்த்த பெற்றோர் மகனிடம் விசாரித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற காயத்ரி (26), முல்லை (25) என்ற இரண்டு திருநங்கைகள் சிறுவனை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிறுவன் வேலை செய்து வந்த உணவகத்திற்கு திருநங்கைகள் அடிக்கடி சாப்பிடச் சென்று வந்ததில் அவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். சம்பவத்தன்று அவனுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதையடுத்து பெற்றோர், தங்கள் மகனிடம், யார் அழைத்தாலும் தனியாகச் செல்லக்கூடாது என புத்திமதி கூறியுள்ளனர். ஆனால் சில நாள்கள் கழித்து, மீண்டும் சிறுவன் வீடு திரும்பவில்லை. காடையாம்பட்டி பகுதியில் சிறுவன் தனியாக சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் பெற்றோர் மகனை மீட்டு வந்தனர். காயத்ரி, முல்லை ஆகிய இரண்டு திருநங்கைகள்தான் சிறுவனை மீண்டும் காடையாம்பட்டிக்கு ஆசை வார்த்தைகூறி அழைத்துச்சென்று, அவனிடம் பாலியல் உறவு வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து காக்காபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருநங்கைகள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுதா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட திருநங்கைகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 3 ஆயிரம் அபராதமும் விதித்து பிப். 22ம் தேதி தீர்ப்பு அளித்தார். 

இதையடுத்து அவர்கள் இருவரும் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில், போக்சோ வழக்கில் திருநங்கைகள் இருவர் தண்டிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.