Skip to main content

சென்னையை உலுக்கிய வழக்கில் பல வருடங்கள் கழித்து கிடைத்த தீர்ப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The verdict came after many years in the case that rocked Chennai

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் கே.கே.நகரில் கல்லூரியில் பயின்று வந்த கல்லூரி மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவத்தில் அந்த இளைஞருக்கு அபாரதத்துடன் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது அழகேசன் என்ற இளைஞரால் கொடூரமாக கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்.

மதுரவாயல் பகுதியைச்சேர்ந்தவர் அஸ்வினி. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் கே.கே.நகர் மேற்கில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம். பயின்று வந்தார். தந்தை இல்லாத நிலையில் தாய்தான் அவரை படிக்க வைத்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்ற இளைஞர் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடைசிவரை அஸ்வினி அழகேசனின் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அழகேசன்,  அஸ்வினியின் வீட்டு வாசலில் வைத்தே கட்டாய தாலி கட்டியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கவே, போலீசார் அழகேசனை விசாரித்து கண்டித்து அனுப்பி வைத்தனர். ஆனால், அதன்பின்னரும் அஸ்வினியை தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் அழகேசன். இதனால் மதுரவாயல் பகுதியை விட்டு, உறவினர் வீடான ஜாபர்கான் பேட்டையில் தங்கியிருந்து அங்கிருந்து கல்லூரிக்கு வந்து சென்றார் அஸ்வினி.

இந்நிலையில் 09/03/2018 அன்று மதியம் 2.30 மணியளவில் கல்லூரி முடிந்து வெளியே வந்து, லோகநாதன் தெருவில் நடந்து சென்ற அஸ்வினியை மறித்து காதலை ஏற்கச்சொல்லி வற்புத்தினான் அழகேசன்.  அஸ்வினி மறுக்கவே, சற்றும் எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து அஸ்வினியின் கழுத்தை அறுத்தான் அழகேசன். இதில், அலறித்துடித்த அஸ்வினி ஓட முயற்சித்தார். ஆனால், ஓட முடியாமல் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அழகேசனை பிடித்து கடுமையாக தாக்கினர்.   அடித்து உதைத்து கை, கால்களை கட்டி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் அழகேசனை பொதுமக்கள் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அந்த நேரத்தில் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ச்சியாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை சென்னை அள்ளிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஃபாரூக் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அழகேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்