
சிதம்பரம் அடுத்துள்ள தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஷ வண்டு(கதண்டு) கடித்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் இன்று (29.03.2023) விஷ வண்டுகள் கூட்டமாக பறந்து வந்துள்ளன. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விஷ வண்டுகள் பறந்து வருவதைப் பார்த்து அங்குமிங்கும் ஓடினர். தெருக்களிலும் வீடுகளிலும் சாலைகளிலும் ஓடிய பொதுமக்களைக் கொட்டின. இதில் 7 பேருக்கு தலை மற்றும் உடலின் பல பகுதியில் வண்டுகள் கொட்டியதால் வலி ஏற்பட்டு துடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வலியால் துடித்தவர்களை சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதில் ஓமக்குளம் தச்சன் தெருவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான ஆர்த்தி (23), வளர்மதி (34), தியாகராஜன் (38), புவனேஸ்வரி (31) மற்றும் கமலா, வனிதா, மதன் ஆகிய 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஓமக்குளம் தச்சன் தெருவில் உள்ள புளியமரத்தில் 200-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளன. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன், புளியமரத்தில் உள்ள விஷ வண்டுகளை தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.