புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகிறது. விசாரணை 545 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல்பூர்வமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
தொடர்ந்து இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு முடியும் நிலையில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தற்பொழுது இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றமும் அனுமதி வழங்கி இருக்கிறது. வருகின்ற மூன்றாம் தேதிக்குள் (ஜூலை 3) இந்த வழக்கை முடிக்க சென்னை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருந்தது. அதனடிப்படையில் ஜூலை மூன்றாம் தேதி இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். இந்த அதில் குற்றவாளிகளை உறுதிப்படுத்துதல்; வழக்கு என்ன நிலையில் இருக்கிறது; வழக்கு முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.