Skip to main content

வேங்கைவயல் சம்பவம்; முதன்முதலாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

 

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை செய்தபோது, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலீஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் என 147 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்டமாக விசாரணையை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 

118 நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று 119வது நாளாக, இந்த சம்பவம் தொடர்பாக டிசம்பர் 27 ஆம் தேதி முதன்முதலாக மக்களால் புகாரளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய வெள்ளனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல், காவலர் கார்த்திக் இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்