தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘’மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வினின்றும் விலக்களிக்கக் கோரும் நீட்-விலக்கு மசோதாக்கள் இரண்டு, 2017 ஜனவரியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் நடந்தது நாடறியும்.
ஆனால் இந்த மசோதாக்களுக்குப் பதிலே கிடைக்காத நிலையில், மாணவர்களின் படிப்பு முக்கியம் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க, மத்திய உள்துறை, நலவாழ்வுத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி, 2017இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் மற்றும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு இந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.
நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள், “தமிழக நீட்-விலக்கு மசோதாக்கள் 2017 பிப்ரவரியில் கிடைத்ததாகவும், 2017 செப்டம்பரில் குடியரசுத்தலைவர் அவற்றை நிறுத்தி வைத்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன்பின் என்ன நிலைமை என்று கேட்டபோது, இரு மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்துவிட்டதாக உள்துறை அமைச்சக சார்பு செயலர் சொன்னார்” என்று கூறினர்.
இந்த நிலையில், இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16ந் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது. நீட்-விலக்கு மசோதா ஒப்புதலுக்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றுதான் இதுநாள் வரை சொல்லி வந்தனர் தமிழக அமைச்சர்கள். நீட்-விலக்கிற்காக பிரதமரிடம் தான் பேசியதாக நேற்று முன்தினம் கூட தெரிவித்தார் முதல்வர். ஆனால் இரு மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலர் சொன்னது எப்படி?
இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசுத் தரப்பிலிருந்து சொல்லப்படாத செய்தி இது. அப்படியென்றால் இதுநாள் வரை நடந்ததெல்லாம்...?
அப்பட்டமான நாடகம். உலகில், வரலாற்றில் நடந்தேயிராத மோ(ச)டி நாடகம்.
சட்டப்படி நடக்காத மத்திய பாஜக ஆட்சியில் சின்னத்தனம்தான் துரைத்தனம் செய்கிறது. சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கும் இந்த ஆட்சி ஜனநாயகத்தைத் தாக்கியழிக்கிறது. கார்ப்பொரேட்டுகளுக்கான ஆட்சியாயிருக்கிறது; அதனால்தான் ஏழைபாளைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. அந்த வகையில்தான் நீட் நுழைக்கப்பட்டது.
நீட்டை நுழைப்பதென்றால் அதை ஏற்கின்ற அரசும் வேண்டும். பொருளியல் குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்த அதிமுக அமைச்சரவையும் சுமக்கும் நிலையில், நீட்டை அது ஏற்காமல் எப்படி? அதேநேரம் மக்களை ஏமாற்ற நாடகம்தான் சரி! ஆம், மோடி அரசின் மோசடி நாடகத்தில் எடப்பாடி அமைச்சரவைக்கும் பாத்திரங்கள்! ஆக கூட்டாட்சி முறைக்கு குழி வெட்டும் வேலையை எடப்பாடியை வைத்தே செய்கிறார் மோடி.
பொதுப்பட்டியல் என்பதற்கு மத்திய அரசு தான்தோன்றித்தனமாக சர்வாதிகாரமாக செயல்படலாம் என்று பொருளல்ல. அதேபோல் குடியரசுத் தலைவரும் தமிழக அரசின் மசோதாவை நிராகரிக்கலாம் என்பதற்கும் இடமே இல்லை. அப்படியிருக்கையில், துணிச்சலாக, சர்வசாதாரணமாக, குடியரசுத்தலைவர் நிராகரித்துவிட்டார் என்று எப்படிச் சொன்னார் மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலர்?
மோடி சொல்லியிருந்தால் மட்டுமே உள்துறை அமைச்சக சார்பு செயலர் அப்படிச் சொல்லியிருக்க முடியும். அப்படிச் சொல்லியிருந்தால், அது குடியரசுத்தலைவரின் பெயரை தவறாகப் பயன்படுத்தியது என்பதால் மன்னிக்க முடியாத குற்றமல்லாமல் வேறென்ன?
தமிழக மக்களால் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மோடி அரசே, பதில் சொல், வேண்டாம் விளையாட்டு! அதிமுக அரசே, மத்திய அரசின் கழுத்தை நெருக்கு, வேண்டும் நீட்-விலக்கு!
நீட்-விலக்கு மசோதாவுக்கு ஒப்புதலளிக்கப்பட்டாக வேண்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ’’