வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தால் நகரமே தகிக்கிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற பல்வேறு அமைப்புகள் திமுக கூட்டணியில் உள்ளன.
அதோடு, முத்தலாக் சட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசாங்கத்தோடு சேர்ந்து அதிமுக நடத்திய நாடகத்தால் இஸ்லாமிய அமைப்புகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் தங்கள் சமூக மக்களிடம் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
அதன்படி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா போன்ற பல இஸ்லாமிய தலைவர்கள் ஆம்பூர் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜமாத்களின் முத்தவல்லிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தினர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும் கலந்துக்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் திருமண மண்டபத்தில் எப்படி இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்தலாம் என அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஆம்பூர் தாலுக்கா தேர்தல் அதிகாரியும், ஆம்பூர் தாசில்தாருமான சுஜாதா விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதி பெறவில்லை எனச்சொல்லி அந்த தனியார் திருமண மண்டபத்துக்கு சீல் வைத்தனர். இந்த விவகாரம் இஸ்லாமிய மக்களிடையே பரவியது. எத்தனையோ விதிமீறல்கள் வேலூர் தொகுதியில் நடைபெறுகின்றன. அப்படியிருக்க எங்கள் சமூக மக்கள் நடத்திய கூட்டத்தை மட்டும் கணக்கில் எடுத்து அனுமதி பெறவில்லையென மண்டபத்துக்கு சீல் வைத்தது அராஜகம் என ஆளும் கட்சியான அதிமுக மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.