Skip to main content

விழுந்த மரம் எழுந்து நின்ற அதிசயம்; வழிபாடு செய்யும் கிராம மக்கள்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

vellore kizhvaithiyaankuppam temple tree incident 

 

வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியான்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து மின் கம்பங்கள், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் சேதம் அடைந்தன. கேவி குப்பம் அடுத்த வேப்பங்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரயில்வே கேட் ஒட்டிய பகுதியில்  படவேட்டு அம்மன் ஆலயம் உள்ளது. இந்த படவேட்டு அம்மன் ஆலயம் அருகில் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது.

 

சூறாவளிக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி கனமழையால் கோவில் அருகே இருந்த அரச மரமும் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. வேரோடு சாய்ந்த அரசமரத்தை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மார்ச் 23 ஆம் தேதி மரக்கிளைகளை வெட்டும் பணியில் வேலையாட்கள் ஈடுபட்டனர். மரத்தின் அடிப்பகுதியை பகுதி பகுதியாக வெட்டாமல் விட்டுச் சென்றனர். இந்நிலையில் மார்ச் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை படவேட்டு அம்மன் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் வேரோடு சாய்ந்து தரையில் கிடந்த அரச மரம் 'தானாக' எழுந்து நின்றது கண்டு  கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் பக்தி பரவசம் ஆகிவிட்டனர்.

 

வேருடன் சாய்ந்து தரையில் கிடந்த அரச மரம் தானாக எழுந்து நின்ற சம்பவம் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. தகவல் அறிந்த சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து வந்த ஏராளமான பெண்கள், சாய்ந்து கிடந்து பின் எழுந்து நின்ற அரச மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி, அருள் வந்து ஆடியும் வழிபாடு செய்து வருகின்றனர். கனமழையால் கீழே விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டதால் மரத்தின் எடை குறைந்து அடிப் பகுதியின் கனத்தால் மரம் தானாக எழுந்து நின்றதால், கிராம மக்கள் மரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து சாமி வழிபாடு செய்யும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.