வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள பிரம்மபுரம் கிராமம் திருவள்ளுவர் தெருவில் வசிப்பவர் விஜயகுமாரி. இவரது கணவர் வெங்கட்ராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.
விஜயகுமாரி அதேபகுதியில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். வெளிப்பார்வைக்கு பெட்டிக் கடையாக இருந்தாலும் உள்ளே மருத்துவ கிளினிக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தேடிவரும் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மருத்துவப் படிப்பு படிக்கவில்லை என்பதும் அலோபதி மருத்துவம் கூட படிக்காமல் நர்சிங் படிப்பை மட்டும் படித்துவிட்டு போலியாக தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு சிகிச்சை அளித்ததை அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதனை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், முதன்மை மருத்துவ அலுவலர் செந்தாமரைக் கண்ணன், மருத்துவக் குழுவினர் காட்பாடி வட்டாட்சியர், வருவாய்த் துறையினர், அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாகச் சென்று ஆய்வு செய்து போலி மருத்துவர் என்பதனை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் தர, அதன் அடிப்படையில் விஜயகுமாரியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கிளினிக்காக செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்தப் போலி மருத்துவரிடம் சில மாதங்களுக்கு முன்னர், 'நீ போலி டாக்டர் என்பதை செய்தி வெளியிடுவோம்' எனப் பணம் கேட்டு மிரட்டியதாக 4 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்தப் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பே அதிகாரிகள் சரியாக விசாரித்திருந்தால் அந்தச் செய்தியாளர்களோடு சேர்ந்து இந்தப் போலி மருத்துவரையும் கைது செய்திருக்க முடியும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.