Skip to main content

தலைக்கு ஆயிரம் - வேலூர் தொகுதியில் பட்டுவாடாவை தொடங்கிய ஏ.சி.சண்முகம்

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 


வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பந்தாவாக தொடங்கி, இடையில் பரபரப்பை உருவாக்கி, தற்போது ஆச்சர்யத்தோடு போய்க்கொண்டுயிருக்கிறது.

 

a


 

பந்தா….


அதிமுகவின் சின்னத்தில் பாஜகவின் நண்பரான ஏ.சி.சண்முகம் இந்த தொகுதியில் நிற்கிறார். இவரை எதிர்த்து திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நிற்கிறார். இருவரும் பந்தாவாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். சொந்த கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் தேர்தல் செலவுக்காக வாரி தந்தார்கள்.  அவர்களும் பரபரப்பாக தேர்தல் வேலை பார்க்க தொடங்கினார்கள். அதோடு, அதிக வாக்குகள் வாங்கி தரும் தொகுதி நிர்வாகிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, 50 லட்சம் பரிசு என போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தார்கள்.


பரபரப்பு…


பிரச்சாரம் நடந்துக்கொண்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு செய்து 10 லட்சம் பறிமுதல் செய்தது. ஆதரவாளர் வீட்டில் 11 கோடி ரூபாய் பணத்தினை பிடித்தது. அதேப்போல் ஏ.சி.சண்முகத்துக்கு நெருக்கமான நண்பரின் கல்லூரியில் ரெய்டு செய்து பணத்தை பிடிக்க மேலிடத்து உத்தரவால் விவகாரத்தை அமுக்கிவிட்டு சென்றனர் என்கிற தகவலும் உண்டு. இந்த பிரச்சனைகளால் தேர்தல் நிறுத்தப்படும் என்கிற பதட்டம் தற்போது வரை உள்ளது.


ஆச்சர்யம்……


இந்நிலையில் ஏப்ரல் 13ந்தேதி இரவு வாணியம்பாடி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டு ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என பண விநியோகம் செய்துள்ளனர். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் அந்த தொகுதியில் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் தந்துள்ளனர். அதேப்போல் குடியாத்தம், அணைக்கட்டு தொகுதியிலும் கச்சிதமாக வாக்காளர்களுக்கு தர வேண்டியதை தந்துள்ளனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


பணம் தரும் தகவல் பறக்கும் படையினருக்கு தெரிந்தும் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தள்ளது. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளரை மட்டும் குறிவைத்த பறக்கும்படை மற்றும் வருமானவரித்துறை அவர்களை விட பலமடங்கு செலவழிக்கும் ஏ.சி.சண்முகத்தை கண்டுக்கொள்ளவேயில்லை என்கிற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது அரசியல் பார்வையாளர்களால்.

 

சார்ந்த செய்திகள்