வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் அந்த பாலம் வரும் நான்காம் தேதி முழு பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு பாலம் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் அதிமுகவின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு அவரே தன்னிச்சையாக இன்று ரிப்பனை கட்டி பாலத்தை திறந்து வைத்துள்ளார். வரும் நான்காம் தேதி வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் அந்த பாலத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு அந்த பாலத்தை திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வருவாய்த்துறை அளித்த புகாரின் பேரில் அதிமுக மாவட்ட செயலாளர் பாலத்தை திறந்தது தொடர்பாக அவரது வீட்டிற்கே சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் செய்தது தவறு என எஸ்.ஆர்.கே.அப்பு ஒப்புக்கொண்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் வீட்டின் அருகே கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.