வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாக கூறி வேலூர் மக்களவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனால் அதிமுக, திமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 17-வது மக்களவை தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெற்றது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதில் பாஜக கட்சி மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.
ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதே போல் அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு மனுவை அளித்துள்ளனர். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். இதில் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் 660 பேருக்கு ஆண்டுதோறும் தனது கல்வி நிறுவனத்தின் மூலம் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், இலவச உயர்க்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் ஜூலை- 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக கட்சி வேலூர் மக்களவை தொகுதியை கைப்பற்ற புது வியூகம் வகுத்துள்ளது என்றே கூறலாம். அதிமுகவின் நடவடிக்கை காரணமாக திமுக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.