வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலை வழக்கம் போல் தலைவர்களின் சிலைகளை இரும்பு கூண்டு போட்டு அடைத்து பாதுகாப்பாக வைத்திருப்பதை போல இந்த சிலையும் இரும்பு வலை போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த சிலையை பார்த்தபோது, சிலையின் இடது கையின் மணிக்கட்டு வரை உடைந்து இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தகவல் பரவி அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வந்து பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில், சிலையின் கை சேதமடைந் துள்ளது. இதுப்பற்றி விசாரிக்க வேண்டும் என புகார் தந்தனர். போலிஸாரோ, இந்த சிலை வைத்து 25 ஆண்டுகளாகிவிட்டது. இரண்டு நாளாக மழை பெய்தது, அதில் இந்த மண் சிலை நனைந்து உடைந்துயிருக்கலாம் எனச்சொல்லியுள்ளனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏற்றுக்கொள்ளாததால் சிலையின் கை தானாக உடைந்ததா அல்லது உடைக்கப்பட்டதா என விசாரணை நடத்தினர்.
தற்போது, அந்த சிலையின் கை மழையால் தான் உடைந்தது என முடிவாகி, விசாரணையை போலிஸார் நிறுத்தியுள்ளனர் என்கின்றனர்.