மிகுந்த காய்ச்சலுடன் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், கேரளாவிலிருந்து அத்துமீறி தமிழக எல்கைக்குள் நுழைய முற்பட்ட ஆம்புலன்ஸை மறுபடியும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பியுள்ளது தென்காசி மாவட்ட நிர்வாகம்.
கரோனா தொற்று பயத்தால் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்கைகளை மூட உத்தரவிட்டு கண்காணிப்பை பலப்படுத்தியது தமிழக அரசு. இதில் தமிழக கேரள எல்லைப் பகுதியான இணைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை சோதனைச்சாவடியும் அடக்கம். இங்கு பால், காய்கறி, டீசல், பெட்ரோல் மற்றும் மருத்துவ ரீதியாக செல்லக்கூடிய வாகனங்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து சோதனைச்சாவடி வழியாக வரக்கூடிய வாகனங்களை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே தமிழ்நாட்டிற்குள் அனுப்புகிறார்கள்.
அதிலும் கேரளப் பதிவெண் கொண்ட வாகனங்களில் வரும் மக்கள் யாரையும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களில் மருத்துவ பரிசோதனையுடன் உள்ளே அனுமதி அளிக்கப்படுகிறது. முற்றிலும் தடைச்செய்யப்பட்ட இந்த சோதனைச்சாவடியில் 30க்கும் பாதுகாப்பு படையினர் பணி செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புளியரை சோதனைச் சாவடியினை நோக்கி ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் வேளையில் ஆம்புலன்ஸ் ஒன்று பலத்த சைரன் ஒலியுடன் வெகு வேகமாக வந்து தமிழக எல்கைக்குள் உள் நுழைய முயற்சித்தது. அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், கோட்டாட்சியர் பழனிக்குமார் மற்றும் சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தினர்.
வாகன ஓட்டியோ, அவர்களது சொந்த ஊர் அருகிலுள்ள கடையநல்லூர். அவர்களை வீட்டினில் விடவே இப்படி வந்துள்ளோம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
சுகாதாரத்துறையினரோ ஆம்புலன்ஸில் இருந்தவர்களை பரிசோதிக்க தாய் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மூவருக்குமே காய்ச்சல் என்பது உறுதியானது. இது தென்காசி மாவட்ட நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கேரளாவிற்கே அந்த ஆம்புலன்ஸ் திரும்ப அனுப்பப்பட்டது.
வேனில் இருந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று போலீசாரிடம் நாம் விசாரித்தபோது, துபாயிலிருந்து திருவனந்தபுரம் பகுதிக்கு காய்ச்சலுடன் வந்தவர்கள், திருவனந்தபுரத்திலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் 155 கி.மீ தூரமுள்ள தமிழக எல்கைப் பகுதிக்கு வருகைத் தர காரணம் என்ன..? இல்லை மருத்துவமனை சிகிச்சையிலிருந்து தப்பி வந்தவர்களா.? என கேரள அரசுடன் தமிழக காவல்துறை இணைந்து விசாரனை செய்து வருகின்றது என தெரிவித்தனர்.