வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகப் பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1993ஆம் வருடம் வீரப்பனைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநில அரசுகளும் கூட்டு ஒப்பந்தத்தின் பெயரில் சிறப்பு அதிரடிப்படை ஒன்றை அமைத்து மலையோர கிராமங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் வீரப்பன் நடமாட்டமுள்ள மலையோர கிராம மக்களைச் சந்தேகத்தின் பெயரில் படித்துச் சென்று சட்டவிரோதமாகச் சித்ரவதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்து பாலியல் வன்முறை, திட்டமிடப்பட்ட மோதல் சாவுகள், ஒன்பதரை ஆண்டுகள் மைசூர் தடா எனும் பெய் வழக்குகள் போன்ற எண்ணற்ற கொடுமைகளைச் செய்து வதைத்து வந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும், அரசியல் கட்சிகள் தன்னார்வ அமைப்புகள் போன்றவற்றின் மூலமாகத் தேசிய மனித உரிமை ஆணையத்திற்குப் புகார்களாகக் கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் சதாசிவ கமிட்டி ஆக்கிரமிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து 6 அமர்வுகளாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் எஸ்.டி.எப் அதிகாரிகள் என சுமார் 300க்கும் அதிகமானோர் தங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். மேலும் இக்கமிட்டியானது 192 பாதிக்கப்பட்ட சாட்சியங்களில் 89 நபர்களைத் தேர்வு செய்தது. இவர்களுக்கு 2000ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது வீரப்பனால் கோரிக்கை வைக்கப்பட்டு இரு மாநில அரசுகளால் தலா ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த 10 கோடியில் இரு மாநில அரசுகளும் 2.80 கோடிகள் இடைக்கால இழப்பீடாகக் கடந்த 2007ஆம் ஆண்டு கொடுத்திருந்தது.
இந்நிலையில் இடைக்கால இழப்பீடு கொடுத்தது 14 ஆண்டுகள் ஆகிய பின்பு தற்போது பாதிக்கப்பட்ட மக்களே ஒன்றுகூடி விடியல் மக்கள் கூட்டமைப்பு லக்கம்பட்டி என்ற பெயரில் அமைப்பாகி முருகேசன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீதமுள்ள 7.20 கோடி பணத்தையும் முழு நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனு கடந்த 12.03.2021ல் நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு முழு நிவாரணம் வழங்கவும், தங்களின் குடும்ப வாரிசுகளுக்கு ஏதாவது ஒரு துறைகளில் தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக முதலமைச்சர் அலுவலகம், கர்நாடக முதலமைச்சர் அலுவலகம், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மனு அளித்துள்ளனர்.