Skip to main content

வீராணம் ஏரி: பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது...

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

veeranam river overflow water draining from dam

 

 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீருக்காகத் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

 

தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 200 கன அடி தண்ணீரும் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 45 அடியாக உள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 66 கன அடியும், விவசாயப் பாசனத்துக்கு விநாடிக்கு 25 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நேற்று (நவ.17) ஏரியின் பாதுகாப்பைக் கருதியும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாகவும் ஏரியின் வடிகால் மதகான வி.என்.எஸ்.எஸ். மதகு வழியாக விநாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது.

 

சிதம்பரம் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து ஏரியின் கரைகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னைக்குத் தண்ணீர் அனுப்பத் தடை!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Veeranam Lake dried up without water supply, so forbidden to send water Chennai

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரம் இதுவே ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரிக்கு மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை கீழணையில் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளாக அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்தடையும். இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 71 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி வறண்டு குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. அதாவது நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிட மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கோடையை சமாளிக்க சென்னைக்கு என்எல்சி சுரங்க நீரை வாலாஜா ஏரியில் எடுக்கவும், வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களில் தண்ணீர் எடுக்கவும், நெய்வேலி சுரங்க நீரை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கவும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.