வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தைவிட கடந்த சிலதினங்களாக வேகமாக காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

wind

Advertisment

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கடற்கரையோரமாக அமைந்துள்ளது. வருடத்திற்கு இரண்டு முறைக்கு குறைவில்லாமல் புயலையும், ஆண்டுதவறாமல் கோடைகாலங்களில் வறட்சியையும் சந்தித்து வரும் பகுதியாகும். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீசிய கஜா புயல் அவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டுவிட்டது, கிட்டதிட்ட அவர்களுக்கு மறுபிறவி என்றே கூறலாம் அப்படியொரு பாதிப்பைச் சந்தித்தனர்.

Advertisment

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடங்கிய அதிவேக காற்றானது கடற்கரையில் சுழன்றடித்து பாதிப்பை உண்டாக்கிவருகிறது. கடற்கரை மணலை அள்ளிவந்து வீதியிலும், வீடுகளிலும், சாலையில் செல்பவர்களின் முகத்திலும் வீசிவருகிறது. கடலில் அதிக சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் மின்வினியோகம் அவ்வப்போது தடைபடுவதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரின் வினியோகமும் பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் தலைத்தூக்கிவருகிறது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தெற்கு திசையிலிருந்து வழக்கத்தைவிட அதிவேகமான காற்று வீசி வருகிறது. ஆழ்கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உணரப்படுவதால் மீன்பிடித்தொழிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அத்துடன் கோடியக்கரை, படகுத்துறை பகுதியில் வழக்கமாக படகுகளை நிறுத்தும் பரப்புத்துறையில் கடல்நீர் அவ்வப்போது உட்புகுந்து, வெளியேறிவருவது மீனவர்களை அச்சமடையவே செய்துள்ளது. மீனவர்கள் படகுகளை அங்கு நிறுத்த முடியாமல் அவதியுற்றுவருகின்றனர். கரையோரத்தில் சில நேரத்தில் கடல்உள்வாங்கவும் செய்கிறது.

காற்றின் அதிவேகத்தால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் மின்வெட்டும் அதிகமாக நிகழ்கிறது. அதனால் நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றமுடியாத நிலையும் உருவாகியுள்ளது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் அப்பகுதி மக்களின் மனதில் பதிந்துள்ளது.