சேலம் மாவட்டத்தில் இன்று (29/11/2021) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "அம்மா உணவகங்களை மூட திமுக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அம்மா உணவகங்களில் பொருட்களைக் குறைத்தனர், தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை, சம்பளத்தைக் குறைக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவருந்திவருகின்றனர். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து பேசுவதற்கு திமுகவுக்குத் தகுதியில்லை. கலைஞர் தலைமையிலான கூட்டத்தில் நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக ஆட்சியில்தான் ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் மீது பொய் வழக்குப் பதிந்து அச்சுறுத்துகிறது திமுக. டிசம்பர் 4ஆம் தேதிமுதல் அம்மா மினி கிளினிக் உதவியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தகவல். 1,800 மருத்துவர்கள், 1,420 உதவியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தகவல். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா மினி கிளினிக் கொண்டுவரப்பட்டது.
ஹெக்டேருக்கு ரூபாய் 60,000 இழப்பீடு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நெல் மூட்டைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்டாவில் மீண்டும் சேத மதிப்புகளைக் கணக்கீட்டு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வேதா இல்லம் விவகாரத்தில் கட்சியினருடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும்". இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.