தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை (14/04/2022) தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துக் கொள்ளும்படி முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆளுநரின் இந்த தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தொல்.திருமாவளவன் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்?
சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் ஆளுநர், சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்?
எனவே, ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை வி.சி.க. புறக்கணிக்கிறது. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.