Skip to main content

வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணம் உயர்வு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Vandalur Zoo Entry Fee Hike

 

நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். இந்த பூங்கா அதன் அறிவியல் மேலாண்மை நடைமுறைகளுக்கு பெயர் பெற்றது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2022 ஆம் ஆண்டில் பெரிய மிருகக்காட்சி சாலை பிரிவில் அதிக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இந்த பூங்கா நாட்டிலேயே "சிறந்த மிருகக்காட்சி சாலை" என மதிப்பிடப்பட்டது. தற்போது, பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1977 வன விலங்குகள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

 

இந்நிலையில் பூங்காவிற்கான கட்டண உயர்வு குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது அளிக்கப்பட்டு வரும் இலவச நுழைவு கட்டண சலுகை தொடர்கிறது. 5 வயது முதல் 12 வயது வரையிலும் மற்றும் 13 வயது முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக 20 ரூபாய்  மட்டும் வசூலிக்கப்படும்.

 

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூபாய் 25 ரத்து செய்யப்படுகிறது. சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டைம் ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டண முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூபாய் 115 லிருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூபாய் 100 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வாகனக் கட்டணம் ரூபாய் 50 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவு (Video camera) கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்