Skip to main content

தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்! முதல்வர் பாராட்டு!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Vaishali on becoming the first female Grandmaster from Tamilnadu

 

இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டராக  தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் செஸ் எல்லோபிரேகாட் ஓபன் போட்டியில் 2 தொடர்  வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். வைஷாலி 2501.5 செஸ் ரேட்டிங் பெற்று பெண்கள் செஸ் தரவரிசைப் பட்டியலில் உலகத்திலேயே 11ஆவது இடத்திலும், இந்திய அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளார். வைஷாலி, பிரபல தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் வைஷாலியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மகத்தான வாழ்த்துக்கள் வைஷாலி, இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். 2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்தது. உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தா உடன் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்.

 

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடியாக வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். உங்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், உங்கள் குறிப்பிடத்தக்க பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், நம் மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்