தமிழ்நாடு அரசு சார்பில் 100 வயதைக் கடந்து வாழும் சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனையேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக செனர் மற்றும் சிண்டிகேட், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். மேலும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்திருந்தார்.
இந்த நிலையில் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்காதது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
“டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது
இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்
பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது
கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய் சிவக்கப் போகிறது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.