Skip to main content

வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Vadapathimangalam Assistant Electrical Engineer Post Removal

 

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சாத்தனூர், சித்தாம்பூர், வேல்குடி, பழையனூர் ஆகிய கிராமங்களுக்கு வடபாதிமங்கலத்தில் மின் பொறியாளர் அலுவலகம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த ஆறாவது மாதம் (ஜூன்) செலுத்திய மின் கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என தினசரி நாளிதழில் வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

 

வடபாதிமங்கலம் மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் சார்பில் நாளிதழில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கணக்கீடு பணி செய்ய போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் (2023) 8 வது மாத கணக்கீட்டிற்கு 6 வது மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்திடுமாறு பழையனூர், கானூர், சாத்தனூர், சித்தாம்பூர், வெள்ளக்குடி, வேளுக்குடி ஆகிய பகுதி மின் நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடம் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மின்சார வாரியம் சார்பில் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம் ராஜ் பணியிடைநீக்கம் செய்து மின்வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Extension of time for payment of electricity bill
கோப்புப்படம்

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த நாளைய (07.12.2023) தினம் கடைசி நாளாக இருந்தது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அபராதம் இல்லாமல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் எனக் கூடுதல் கால அவகாசம் வழங்கி மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

 

 

Next Story

'இது உலக அரங்கில் தமிழகத்திற்கு அவப்பெயர்' - பாமக அன்புமணி வேதனை

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

'This is a bad name for Tamil Nadu on the world stage'-Pmk Anbumani Angam

 


திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் தடையால் நோயாளி இறந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின்தடையால், அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் (வெண்டிலேட்டர்கள்) செயலிழந்ததால், நுரையீரல் தொற்றுக்காக மருத்துவம் பெற்று வந்த அமராவதி என்ற பெண் நோயர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தொடக்க நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றைக் கடந்து மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்கக்கூடியவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகும். அவற்றின் அவசர சேவைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால், அங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால்,  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டது மட்டுமின்றி, மாற்று  ஏற்பாடுகளும் செயலிழந்து விட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. மருத்துவத்துறையில் தமிழ்நாடு வளர்ந்து விட்டதாக நாம் பெருமை பேசி வரும் நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது பெரும் அவலம் ஆகும்.

 

மின்சாரத் தடையால் நோயாளி உயிரிழந்ததை விடக் கொடுமை, அதை மூடி மறைக்க நடைபெறும் முயற்சிகள் தான். மின்சாரம் தடைபடவில்லை; மருத்துவமனையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தான் இதற்கு காரணம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவமனையின் முதல்வரோ,  மின்தடை  ஏற்பட்டாலும் பேட்டரி உதவியுடன் செயற்கை சுவாசக் கருவிகள் இயங்கின; அதனால், நோயாளியின் உயிரிழப்புக்கு மின்தடை காரணமல்ல என்று கூறி அனைத்தையும் மூடி மறைக்க முயல்கிறார். இவற்றில் எது உண்மை எனத் தெரியவில்லை.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு வளர்ந்து நிற்கும் சூழலில், மின் தடையால் நோயாளி இறந்தார் என்பது உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் அவப்பெயரை பெற்றுக் கொடுக்கும். மருத்துவமனையில் நடந்த குளறுபடிகள், நோயாளியின் உயிரிழப்பு, அதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காத அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி அமராவதி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.