உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், தஞ்சை ரயிலடியில் மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் இரங்கல் மற்றும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டவர்கள் தங்களது கைப்பேசி விளக்குகளை எரியவிட்டு, ஐந்து நிமிடம் மௌனம் கடைப்பிடித்து தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். மேலும், அச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதற்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, விவசாய சங்கப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். மேலும், மஜக கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.