வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் இந்த மாதம் துவக்கத்திலிருந்தே விட்டுவிட்டு கன மழையாகப் பெய்து வருகிறது. இதனால், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இழந்து நிற்கின்றனர். அதேபோல், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ஜெகதீஷ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இருக்கும் வீட்டின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக வீட்டின் அடியில் வெள்ள நீர் போனது அவ்வீட்டில் இருந்தவர்களையும், அதன் அருகே இருந்தவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்றொருவர் நம்மிடம் தெரிவித்ததாவது; “இந்தக் குடியிருப்பில் மொத்தம் ஏழு வீடுகள் உள்ளன. நேற்று முன் தினம் (28ஆம் தேதி) மாலை நான்கு மணி அளவில் அந்த வீட்டில் இருந்த அவ்வீட்டின் உரிமையாளர் வீட்டின் ஹால் ரூமின் தரையில் (டைல்ஸ்) விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டார். அதனைத் தொடர்ந்து என்ன திடீரென விரிசல் ஏற்படுகிறதே என வைட் சிமெண்ட் கொண்டு அதனை அடைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி அவரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அச்சமயம் திடீரென தரையில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
நொடிப் பொழுதில் சுதாரித்துக்கொண்ட அவர், தனது மனைவியைப் பின்னோக்கி இழுத்தார். அப்படி அவர் இழுத்த அடுத்த நிமிடம் வீட்டின் நடுவில் பெரும் சத்தத்துடன் அந்த டைல்ஸ் உடைந்து பூமியின் அடியில் விழுந்து பள்ளம் ஏற்பட்டு அதன் அடியில் வெள்ள நீர் ஓடியது. பாதிக்கப்பட்டவர் என்னிடம். ‘ஒரு நிமிடம் என் மனைவியை இழுக்கவில்லை என்றால், அவரும் அந்தப் பள்ளத்தில் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்’ என்று கண்ணீருடன் கலந்த பதட்டமாகச் சொன்னார். நீச்சல் குளம் அளவிற்கு அந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவரின் மகனும் தற்போது வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், மண் பரிசோதனைக்கு ஆள் அனுப்புகிறோம். அவர்கள் வந்து ஆய்வு செய்து ஆய்வின் முடிவுக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு குடிவரலாம் அதுவரை வரவேண்டாம் என ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார். நாளை காலை இந்தக் கட்டடத்தின் பில்டர் பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்களிடம் வீட்டின் உரிமையாளர், “நான் மாநில கல்லூரியில் 30 வருடங்களாகப் பேராசிரியராக பணியாற்றியுள்ளேன். என் மொத்த உழைப்பையும் இந்த வீட்டிற்கு கொடுத்துள்ளேன். என் மொத்த சேமிப்பையும் கொண்டுதான் இந்த வீட்டை வாங்கினேன். தற்போது எனக்கு திருமண வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை” என ஆதங்கமாகத் தெரிவித்தார். மேலும், “தற்போது இவர்கள் சரி செய்துகொடுத்துவிட்டாலும், நாளை அந்த வீட்டிற்குள் செல்லும்போதும், அடுத்த வெள்ளத்தின்போதும் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்துவிடுமோ எனும் அச்ச உணர்வுடனே கடக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது அங்கிருக்கும் மற்றவர்களுக்கு தங்கள் வீட்டினுள் செல்வதற்கே பயமாக உள்ளது. அதனால், அங்கிருந்து அனைவரும் வேறு இடத்திற்கு மாறிவிட்டோம் என்று அவர் தெரிவித்தார்.