Skip to main content

'கனமழை முடியும் வரை...'- அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 15/10/2024 | Edited on 15/10/2024
NN

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரியில்  கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கோவையில் பள்ளிகள் இன்று அரை நாள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். சில பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிகள் அறிவித்துள்ளது. கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழலில் மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க நிர்பந்தித்தால் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்