கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை செய்து வருகிறது.
இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு பிரிவினரிடையே கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஷோபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (07.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுகையில், “செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய இணையமைச்சர் ஷோபா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி மத்திய இணை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து மன்னிப்பு கோருவது குறித்து முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.