போலியோவை விரட்டியது போல் கரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "தமிழகத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள். மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் இறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது. இந்தியாவில் 2,300 மையங்கள் மூலம் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. கரோனா பரவ தொடங்கியது முதல் தடுப்பூசி பணிகளில் மத்திய அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. கரோனா தடுப்பூசியைச் செலுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி போலியோ தடுப்பூசி போடப்படும். ஜனவரி 17- ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போலியோ தடுப்பூசி போடப்படும். போலியோவை விரட்டியது போல் கரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம்.
முன்கள பணியாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தடுப்புப் பணியில் சிறந்த பங்களிப்பு வழங்கிய தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையைப் பாராட்டுகிறேன். நாட்டிலேயே அதிகளவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இரண்டு கரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வருங்காலங்களில் நகரம் முதல் கிராமங்கள் வரை தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ‘கோவின்’ செயலியில் பதிவுசெய்த சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதற்கட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இந்த ஆய்வின்போது, மத்திய அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.