சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவரை இதுநாள் வரை இருந்த அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. எடப்பாடி அரசோ அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி, சிறப்பு. ஆனால், வரலாற்றை மறைத்து விழா கொண்டாடுவதை எப்படி ஏற்க முடியும் என்கின்றனர் சொந்த ஊர் மக்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றி, தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப்புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர் உமறுப்புலவர். அவர் பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம். ஆனால், இறந்தது எட்டயபுரத்தில். அவருடைய நினைவாக எட்டையபுரத்தின் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு தான் அக்.23-ந் தேதி உமறுப்புலவரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உமறுப்புலவரின் வாரிசுகளை அழைத்துக் கொண்டு, முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க வைத்து, நல்ல பெயர் வாங்கினார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. ஆனால், உமறுப்புலவர் பிறந்த ஊரான நாகலாபுரத்தை புறக்கணிப்பது வருத்தம் அளிப்பதாக கூறுகின்றனர் அந்த கிராம மக்கள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கணேஷ், "எங்கள் ஊரிலும் உமறுப்புலவர் பெயரில் மணிமண்டபம் இருக்கிறது. வாணியம்பாடியை சேர்ந்த டாக்டர்.அக்பர் கவுசர் தனது சொந்த பணம் மூலம் கட்டிக் கொடுத்தது அந்த மண்டபம். அதில் தான் தற்போது அரசு தொழிற்பயிற்சி நிலையம் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகேயே அரசு கலைக் கல்லூரியும் இயங்குகிறது. எனவே, உமறுப்புலவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், மாணவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி இங்கும் அரசு விழா கொண்டாடலாமே?. இதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு அந்த புலவரின் பெருமை தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.
அதே ஊரைச் சேர்ந்தவரும் பத்திரிக்கையாளருமான அய்யப்பன் நம்மிடம், '' உமறுப்புலவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார். எட்டயபுர மன்னரின் அவைப்புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம், தமிழ் பயின்று புலமை பெற்றார் உமறுப்புலவர். தம் ஆசானுக்குப் பிறகு எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். இதனால், இறுதிக்காலத்தில் தான் எட்டயபுரத்திற்கு சென்றார். மற்றபடி வாழ்ந்தது எல்லாம் நாகலாபுரத்தில் தான், அதற்காக எட்டையபுரத்தில் விழா கொண்டாடுவது தவறு என்று சொல்லவில்லை. எங்கள் ஊரில் அவர் பிறந்தார் என்பதை மறைக்கும் செயல்களில் ஈடுபடலாமா?" என்றார். அவரே தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள தமிழ் மையத்திற்கு, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் உமறுப்புலவர் பெயரை வைத்திருக்கின்றனர். ஆனால், அவர் பிறந்த ஊரில் எந்த அடையாளமும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.
இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இந்த கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு?