Skip to main content

"அண்ணனாக தம்பியாக மகனாக பேரனாக சேவை புரிய காத்திருக்கிறேன்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

udhayanidhi stalin karur meeting talks about dmk government schemes

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு 267.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக ஏற்பாடு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி. கரூர் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். தமிழகத்தின் முன்னோடி மாவட்டம் கரூர். மேடையில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு நன்றி. கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சிறப்பு திட்டமாக 50 திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாவட்டங்களை பொறாமை பட வைத்து, அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி வருபவர் செந்தில் பாலாஜி.

 

தொழில் நகரமான கரூர் டெக்ஸ்டைல், பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக உள்ளது. திமுகவிற்கு வாக்களிக்காத மக்களும் பாராட்டும் வகையில் செயல்படுவோம் என்று கூறியதை போலவே முதல்வர் செயலாற்றி வருகிறார். கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் என்னை போட்டியிட அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலின்போது வற்புறுத்தினார். பெண்கள் ஸ்டாலின் பஸ் என்று கூறும் அளவுக்கு சிறப்பு திட்டமாக மாறியுள்ளது. விவசாயிகளுக்கு 1,50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட்டவர் முதல்வர்.

 

காலை சிற்றுண்டி மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். முதல்வரின் 2 ஆண்டுக்கால மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட நேரம் போதாது. 20 மாதங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம். தேர்தலுக்காக அல்ல. அதற்காகவே இந்த மாதிரியான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. என்னுடைய துறையான மகளிர் சுயஉதவி குழு மூலம் கரூர் மாவட்டத்தில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்கள் மூலமாக பாரம்பரிய தின்பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அண்ணனாக தம்பியாக மகனாக பேரனாக எந்த நேரமும் உங்களுக்காக பணியாற்ற, சேவை புரிய காத்திருக்கிறேன்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.