திமுக இளைஞரணி தலைவராக தேர்தெடுக்கப்பட்டதில் இருந்து மீட்டிங், பயணம், நலத்திட்ட உதவிகள் என்று கடந்த ஒரு மாத காலமாகவே பிஸியாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். 80களில் இருந்ததை போன்று இளைஞர் அணியை பழைய வேகத்திற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளில் உதயநிதி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவின் அடிநாதமாக இருந்த இளைஞர் அணியும், தற்போது மற்ற அணிகளை போன்றே சுணக்கமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாகவே திமுகவில் எழுந்து வருகிறது. இந்த குறைகளை உடனடியாக கலையும் பொருட்டு பதவிவேற்ற சில நாட்களிலேயே இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார் உதயநிதி ஸ்டாலின். கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் அணியை சேர்ந்தவர்கள், மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை என்றும், தங்களை எந்த விழாவுக்கும் அழைப்பதில்லை என்றும் புகார் கூறினார்கள். அனைத்தையும் பொறுமையாக கேட்ட உதயநிதி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்திருந்தார்.
![udhayanidhi stalin bib plan in future election](http://image.nakkheeran.in/cdn/farfuture/iXrjIyzboBw61vD1RdLyMnVFvcJewLsbqXNKS_rVMG0/1563617971/sites/default/files/inline-images/udhaya%20600.jpg)
இந்நிலையில், இளைஞர் அணிக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தருவது தொடர்பாக உதயநிதி தற்போது முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வர இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலி்ல் 20 சதவீத இடங்களை இளைஞரணிக்கு ஒதுக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் திமுக இளைஞரணியில் பணியாற்றுவர்கள் 50 பேரை சட்டமன்றத்துக்கு அனுப்ப முடியும் என்று நினைக்கிறாராம் உதயநிதி. தற்போதைய சட்டப்பேரவையில் இளைஞரணியை சேர்ந்த 6 பேர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.