திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 55) இவரது மகன் விவேக் (வயது 34) பெயிண்டர். இவரது நண்பர் பால்ராஜ்(35). இந்நிலையில் சீதாலட்சுமிக்கு சொந்தமாக புத்தூர் பெரியார் நகரில் ஒரு வீடு உள்ளது. சம்பவத்தன்று அந்த வீட்டிற்கு விவேக், பால்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலருடன் வந்து சென்று மது அருந்தியதாக தெரிகிறது. அப்பொழுது அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு உள்ளது. பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று விவேக், பால்ராஜ் இருவரும் உறையூர் வார்டு அலுவலகம் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த சபரி, சந்தோஷ், ஆரிப், வேணு ஆகியோர் சேர்ந்து விவேக் மற்றும் பால்ராஜிடம் தகராற்றில் ஈடுபட்டு இரண்டு பேரையும் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சீதாலட்சுமி, உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் சபரி, சந்தோஷ், ஆரிப், வேணு ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.