யுடியூப் பார்த்து துப்பாக்கிகளை தயாரித்ததாக கைது செய்யப்பட்ட பட்டதாரி வாலிபர்கள் இருவரை, காவல்துறையினர் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் நவீன் சக்கரவர்த்தி (24). பி.சி.ஏ படித்து வந்த இவர், இறுதியாண்டுடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் சஞ்சய்பிரகாஷ் (24). இவர், பி.இ., கணினி அறிவியல் முடித்துவிட்டு, ஒரு ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் நெருக்கமான நண்பர்கள்.
கடந்து பத்து நாள்களுக்கு முன்பு, சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி பகுதியில் ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கி மற்றும் அதை செய்வதற்கான உபகரணங்கள் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், சேலம் செட்டிச்சாவடியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான கத்திகள், துப்பாக்கி செய்வதற்கான இரும்பு உருளைகள், ரம்பம், ஹாக்ஸா பிளேடு, டிரில்லர் மெஷின், முகமூடிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பறவைகளையும், பொதுமக்களையும் பாதுகாப்பதற்காக யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இவர்கள், சேலம் அருகே செட்டிச்சாவடி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். யுடியூப் பார்த்து, வீட்டிலேயே கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரித்து வந்துள்ளனர். இதையடுத்து, ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். ஓமலூர் நீதிமன்ற உத்தரவின்பேரில், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல்துறையினர், இருவரையும் புதன்கிழமை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, அவர்களை ஓமலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து, உள்ளூர் காவல்துறையினர் மட்டுமின்றி, கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி தயாரித்ததன் நோக்கம் என்ன? தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனரா?, வேலை இல்லாமல் இருந்து வந்த இவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்தது யார் யார்?, ஏற்கனவே இதுபோன்ற ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.