Skip to main content

பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி விபத்து-இருவர் உயிரிழப்பு

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

Two people were Lose their live in an electric shock while setting up a pandal at home

 

வேலூரில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியில் மொகிலி (39) என்பவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவரது வீட்டில் நாளை நடக்கும் நிகழ்ச்சிக்காக வீட்டின் மாடியில் பந்தல் அமைக்க மொகிலி முன்றுள்ளார். அவரது உறவினரான பெங்களூரை சேர்ந்த கிஷோர் (22) என்பவரும் மோகிலியும் இரும்பு பைப்புகளை மாடிக்கு எடுத்துச் சென்றனர். அப்போது உயரழுத்த மின் கம்பி இரும்பு பைப் மீது உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

 

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாளைக்கே தேர்தல் வந்தாலும் சந்திப்போம்'-துரைமுருகன் பேட்டி  

Published on 15/01/2024 | Edited on 15/01/2024

 

n

 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொங்கலையொட்டி திமுக தொண்டர்களை சந்தித்தார். இதில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  பேசுகையில், 'தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பு பிரதமராக இருந்த போதும் இப்போதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தர கூடாது என்பதில் வைராக்கியமானவர். அவர் இடத்தில் இருந்து தமிழகத்திற்கு சாதகமான வார்த்தைகள் வராது. டிரிபியூனல் அமைப்பதை எதிர்த்தார். டிரிப்யூனல் கெஜெட்டில் போடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்திற்கு எதிராகக தான் பேசுவார்.

மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என தேவகவுடா கூறுவது, அவர் பிள்ளைகள் அரசியல் நடத்த முடியும் என்பதால் தேவகவுடா ஆதாயத்திற்காக பேசுகிறாரோ, வெறுப்பாக பேசுகிறாரோ ஆனால் தமிழகத்திற்கு எதிர்ப்பாக தான் பேசுவார்.

அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் அவர் கையையா பிடித்துள்ளோம். திமுக நாளைக்கே தேர்தல் வந்தாலும் சந்திப்போம். இது கொள்கைக்காக உருவாக்கப்பட இயக்கம். திமுக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போது இருப்பவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறோம்.    

தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டதற்கு, 'அவர் எதிர்க்கட்சி தலைவர். எப்போது தமிழகம் நன்றாக உள்ளது என கூறப்போகிறார். அவர் அப்படி தான் கூறுவார்' என்றார்.

Next Story

பேருந்தின் கண்ணாடி உடைப்பு; வேலூரில் பரபரப்பு

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Bus window breaking; emotion in Vellore

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் திமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் அருகே அரசு பேருந்து மீது கல் எறிந்து பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்காலிக ஓட்டுநர் பணி வழங்காததால் கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஆத்திரமடைந்து பேருந்து கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது.